தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவருக்கு அண்மையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த 1-ஆம் தேதி இரவு வீட்டில் எதிர்பாராதவிதமாக அவர் கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, சிகிச்சைக்காக திருச்செந்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு மகப்பேறு அறிகுறி இருப்பதை உறுதி செய்தனர்.
இதையறிந்த அந்தப் பெண், யாருக்கும் தெரியாமல் மருத்துவமனையின் கழிவறைக்குச் சென்றுள்ளார். அங்கு அவருக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. சமூகப் பழிச்சொல்லுக்கு அஞ்சிய அவர், பச்சிளம் குழந்தையை கழிவறை குப்பைத் தொட்டியிலேயே வீசிவிட்டு, எதுவுமே நடக்காதது போல மீண்டும் தனது படுக்கைக்குத் திரும்பியுள்ளார்.
சற்று நேரத்திற்குப் பிறகு கழிவறைக்குச் சென்ற மருத்துவமனை ஊழியர்கள், குப்பைத் தொட்டியில் குழந்தை கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து நிர்வாகத்திற்குத் தகவல் அளித்தனர். இது குறித்து திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், உயிரிழந்த நிலையில் இருந்த பச்சிளம் குழந்தையின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக அந்தப் பெண்ணிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் நடந்த இச்சம்பவம் திருச்செந்தூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
