காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே நத்தாநல்லூர் கிராமத்தில், நகைக்காக 80 வயது மூதாட்டியை அம்மிக்கல்லால் அடித்துக் கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். நத்தாநல்லூர் பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் அலங்காரம் (80).

இவரது கணவர் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், அலங்காரத்திற்கு ஒரு மகனும் நான்கு மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். மூதாட்டி மட்டும் தனது வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில், அவரது பிள்ளைகள் தினசரி நேரில் வந்து அவருக்கு உணவளித்து நலம் விசாரித்துச் செல்வது வழக்கம்.

கடந்த 17-ஆம் தேதி காலை, நீண்ட நேரமாகியும் அலங்காரம் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, அவர் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாலாஜாபாத் போலீசார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம், டிஎஸ்பி சங்கர் கணேஷ் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். மூதாட்டியின் தலையில் அம்மிக்கல்லைப் போட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு இருப்பதும், அவர் அணிந்திருந்த தங்க நகைகள் திருடப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. கொலையாளியைப் பிடிக்க எஸ்பி உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இக்கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய அதே பகுதியைச் சேர்ந்த ராமராஜன் என்பவரைப் போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து நகைகளைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.