புதுக்கோட்டையில் நடைபெற்ற பாஜகவின் ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ நிறைவு விழாவில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அனல் பறக்கும் உரையாற்றினார். திமுக அரசை மிகக்கடுமையாகச் சாடிய அவர், மக்கள் கோயில்களில் இறைவனிடம் வேண்டுமளவிற்கு இந்த ஆட்சி மீது அதிருப்தியில் இருப்பதாகக் கூறினார்.
தமிழகம் இன்று போதைப்பொருட்களின் கூடாரமாக மாறிவிட்டதாகவும், ஊழல் மலிந்துவிட்டதாகவும் குற்றம் சாட்டிய அவர், இந்த மக்கள் விரோத ஆட்சியை அகற்ற அடுத்த மூன்று மாதங்களுக்குத் தொண்டர்கள் விரதம் இருப்பது போல அயராமல் உழைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில், 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என நயினார் நாகேந்திரன் நம்பிக்கை தெரிவித்தார்.
தீபாவளிக்கு வாழ்த்து சொல்ல மறுக்கும் திமுக, போலியான மதச்சார்பின்மையைக் கடைபிடிப்பதாகச் சாடிய அவர், அமித் ஷா தலைமையிலான கூட்டணி மட்டுமே தமிழகத்தில் உண்மையான மாற்றத்தைக் கொண்டு வரும் என்றார்.
பீகார் மற்றும் கேரளா உள்ளாட்சித் தேர்தல்களைப் போலவே தமிழகத்திலும் பாஜக மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று அவர் கூறினார்.
