புதுக்கோட்டையில் நடைபெற்ற பாஜக பிரச்சாரப் பயண நிறைவு விழாவில் பங்கேற்ற முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். தமிழகத்தில் எங்கு சென்றாலும் இந்த ஆட்சி எப்போது அகலும் என்ற பேச்சுதான் மக்களிடையே மேலோங்கியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், திமுக அரசுக்கு இன்னும் 90 நாட்கள்தான் மிச்சமுள்ளது என்று அதிரடியாகத் தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும், மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றும் குற்றம் சாட்டிய அண்ணாமலை, முதல்வர் மு.க.ஸ்டாலின் நிர்வாகத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் ஒரு ‘தலைகாட்டி பொம்மை’ போலச் செயல்படுவதாகச் சாடினார்.

தமிழகத்தின் கடன் சுமை குறித்துப் பேசிய அண்ணாமலை, கடந்த நான்கு ஆண்டுகளில் ஒவ்வொரு தமிழன் மீதும் இரண்டரை லட்சம் ரூபாய் கூடுதல் கடனை இந்த அரசு ஏற்றி வைத்துள்ளதாகப் புள்ளிவிவரங்களுடன் சுட்டிக்காட்டினார்.

பொங்கல் பரிசாக 5,000 ரூபாய் கொடுத்துவிட்டு, மறுபுறம் லட்சக்கணக்கில் கடனை அதிகரிப்பது மக்களை ஏமாற்றும் வேலை என்று அவர் சாடினார்.

அத்துடன், திமுக அளித்த 505 தேர்தல் வாக்குறுதிகளில் 50-ஐக் கூட முழுமையாக நிறைவேற்றவில்லை என்று சவால் விடுத்த அவர், நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளின் தேதியை அரசால் வெளியிட முடியுமா என நேரடி கேள்வி எழுப்பினார்.