உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தில் உயிரிழந்ததாகக் கருதப்பட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட நபர், திடீரென உயிர் பிழைத்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. குர்சஹாய்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, அவர் கான்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவரை, ஜனவரி 2-ஆம் தேதி மாலை மருத்துவர்கள் இறந்துவிட்டதாக அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து, அவரது உடல் சொந்த ஊருக்குக் கொண்டு வரப்பட்டு, இறுதிச் சடங்கிற்காக நகராட்சியில் இருந்து வரவழைக்கப்பட்ட குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது.
சுமார் அரை மணி நேரத்திற்குப் பிறகு, குளிர்சாதனப் பெட்டிக்குள் இருந்த நபரின் உடலில் அசைவுகள் இருப்பதைக் கண்டு உறவினர்கள் அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் அடைந்தனர். உடனடியாக அவரை வெளியே எடுத்துப் பார்த்தபோது, அவருக்கு நாடித்துடிப்பு இருப்பதும் சுவாசம் சீராக இருப்பதும் தெரியவந்தது.
மருத்துவமனையின் அலட்சியத்தால் உயிருடன் இருந்தவர் இறந்துவிட்டதாகக் கூறப்பட்டதைக் கண்டு ஆத்திரமடைந்த உறவினர்கள், மீண்டும் அவரை அதே மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். தற்போது அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இச்சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
