2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, அதிமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

இது குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், வருகிற ஜனவரி 7-ஆம் தேதி முதல் ஜனவரி 20-ஆம் தேதி வரை 9 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு இந்த ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

மக்களின் உண்மையான தேவைகளை அறிந்து, சிறந்த தேர்தல் அறிக்கையைத் தயாரிப்பதே இந்த பயணத்தின் முக்கிய நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சுற்றுப்பயணம் ஜனவரி 7-ம் தேதி வேலூர் மற்றும் சேலம் மண்டலங்களில் தொடங்கி, தொடர்ந்து விழுப்புரம், திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை, மதுரை, திருநெல்வேலி எனப் பல்வேறு மாவட்டங்களை உள்ளடக்கி நடைபெறும்.

ஜனவரி 19-ல் கோவை மண்டலத்திலும், இறுதியாக ஜனவரி 20-ம் தேதி சென்னை மண்டலத்திலும் இக்குழுவினர் கருத்துகளைக் கேட்க உள்ளனர். அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் இதற்கான முன்னேற்பாடுகளைச் செய்து, கூட்டங்களை ஒருங்கிணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இக்குழுவினர் வரும்போது விவசாயிகள், நெசவாளர்கள், அரசு ஊழியர்கள், சிறு மற்றும் குறு தொழில் முனைவோர், மாணவர்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் என அனைத்துத் தரப்பு மக்களின் பிரதிநிதிகளையும் நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளைப் பெறத் திட்டமிடப்பட்டுள்ளது.

மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களை உள்ளடக்கிய வலுவான தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.