வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தி வரும் நிலையில், அங்கு ஒரு இந்து தொழிலதிபர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி இரவு, ஷரியத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோகன் சந்திரதாஸ் என்பவர் ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, மர்ம கும்பல் ஒன்று அவரை வழிமறித்துள்ளது. அந்த கும்பல் கோகனை கத்தியால் குத்தியதோடு மட்டுமல்லாமல், அவர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது.
உயிருக்குப் பயந்த அவர் அருகில் இருந்த குளத்தில் குதித்து உயிர் தப்பிய நிலையில், தற்போது பலத்த தீக்காயங்களுடன் டாக்கா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வங்கதேசத்தில் அடுத்த மாதம் பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு நிலவும் அரசியல் ஸ்திரமற்ற சூழலால் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் இந்துக்கள் மீது நடத்தப்படும் நான்காவது பெரிய தாக்குதல் இதுவாகும். ஏற்கனவே தீபு சந்திர தாஸ், அம்ரித் மண்டல் மற்றும் பிஜேந்திர பிஸ்வாஸ் ஆகிய இந்துக்கள் வன்முறை கும்பலால் கொல்லப்பட்ட நிலையில், தற்போது தொழிலதிபர் கோகன் சந்திரதாஸ் குறிவைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக ரபி மற்றும் சோஹாக் ஆகியோரை அடையாளம் கண்டுள்ள போலீசார், அவர்களைத் தேடி வருகின்றனர். இந்தியர்கள் மற்றும் இந்துக்களுக்கு எதிரான இத்தகைய தொடர் தாக்குதல்களுக்கு இந்தியா ஏற்கனவே தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
