அனைத்தையும் சாட்சியாகப் பார்க்கத் தொடங்கினால், இந்த புத்தாண்டு உங்களுக்கு ஒரு மறுபிறவியாக அமையும் எனத் தலைமறைவாக உள்ள சர்ச்சைக்குரிய ஆன்மிகவாதி நித்யானந்தா தெரிவித்துள்ளார்.

இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, தலைமறைவாக இருந்து வரும் நித்யானந்தா, தனது ‘எக்ஸ்’ (X) சமூக வலைதளப் பக்கத்தில் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:

“இந்த 2026-ஆம் ஆண்டில் நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். அது ‘சாட்சி பாவம்’. அனைத்தையும் ஒரு சாட்சியாக நின்று பார்க்கத் பழகிக் கொண்டால், இந்த புத்தாண்டு உங்களுக்கு ஒரு புதிய பிறவியாக அமையும்.” இந்தப் பதிவின் முடிவில், தன்னை “பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம்” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழகத்தின் திருவண்ணாமலையில் பிறந்த நித்யானந்தா, கர்நாடகா மற்றும் பல்வேறு மாநிலங்களில் ஆசிரமங்களை நிறுவி ஆன்மிகச் சொற்பொழிவுகள் மூலம் பிரபலமானார். இருப்பினும், அவர் மீது சுமத்தப்பட்ட பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

இந்தியக் காவல்துறையினரால் தேடப்பட்டு வரும் நிலையில், அவர் இந்தியாவை விட்டு வெளியேறி ‘கைலாசா’ என்ற தனித் தீவை உருவாக்கி அங்கு வசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
கடந்த காலங்களில் நித்யானந்தா இறந்துவிட்டதாகப் பல்வேறு வதந்திகள் பரவின. ஆனால், அவரது சீடர்கள் அதனைத் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.

தற்போது அவர் உயிருடன் இருக்கிறாரா அல்லது எங்கு இருக்கிறார் என்பது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் இல்லாத நிலையிலும், அவ்வப்போது அவர் உரையாற்றுவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. ஒருபுறம் அவருக்கு கடும் எதிர்ப்புகள் இருந்தாலும், மறுபுறம் அவரது போதனைகளைப் பின்பற்றும் ஆதரவாளர்களும் இருக்கவே செய்கின்றனர்.