கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த நவம்பர் மாதம் அடுத்தடுத்து 13 வீடுகளில் அரங்கேறிய தொடர் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய வடமாநிலக் கொள்ளையர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.

அரசு ஊழியர்கள் வசிக்கும் இந்த குடியிருப்பில் அனைவரும் பணிக்குச் சென்ற நேரத்தைப் பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள், வீட்டின் பூட்டுகளை உடைத்து தங்கம் மற்றும் வெள்ளி நகைகளையும் ரொக்கப் பணத்தையும் திருடிச் சென்றனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இர்ஃபான், ஃபர்மான் மற்றும் கல்லு ஆரிஃப் ஆகிய மூவரைத் துப்பாக்கிச் சூடு நடத்தி அதிரடியாகக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இந்த மூவரும் தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் தொடர் குற்றச் செயல்களைக் கருத்தில் கொண்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வடக்கு சரக காவல் துணை ஆணையாளர் மற்றும் ஆய்வாளரின் பரிந்துரையின்படி, கோவை மாநகரக் காவல் ஆணையர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் இந்த மூன்று வடமாநிலக் கொள்ளையர்கள் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான தடுப்புக் காவல் ஆணை சிறையில் உள்ள அவர்களுக்கு முறையாக வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இத்தகைய குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகரக் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.