அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் திருநங்கை ஒருவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த ஜான் (30) என்ற லாரி ஓட்டுநருக்கும், திருநங்கை கயல்விழி என்பவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த ஜான் கயல்விழியை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் தலை, கை, கால் என உடலின் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் பலத்த காயமடைந்த கயல்விழியை, ஜான் அருகிலிருந்த சாக்கடை கால்வாயில் வீசிவிட்டுத் தப்பியோடியுள்ளார். மறுநாள் காலை குற்ற உணர்வால் ஜான் காவல் நிலையத்தில் சரணடைந்ததைத் தொடர்ந்து, போலீசார் விரைந்து சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கயல்விழியை மீட்டனர்.

இந்த முதலுதவிக்குப் பிறகு அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த கொடூரத் தாக்குதல் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தாக்குதலுக்கான பின்னணி குறித்து லாரி ஓட்டுநர் ஜானிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.