தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், திருத்தணி ரயில் சம்பவத்தைத் தொடர்ந்து கோவையிலும் வடமாநிலத் தொழிலாளர்கள் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ் மற்றும் கோவிந்த் கோன்ட் ஆகிய இளைஞர்கள், கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மர ஆசாரிகளாகப் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 15-ஆம் தேதி மாலை, அங்கிருந்த பேக்கரி ஒன்றிற்கு இருவரும் டீ குடிக்கச் சென்றுள்ளனர்.

அப்போது அங்கிருந்த சில நபர்கள், இந்த இளைஞர்களிடம் தமிழில் ஏதோ கேட்டுள்ளனர். தமிழ் தெரியாத காரணத்தால், வடமாநில இளைஞர்கள் சைகை மூலம் பதில் கூற முயன்றுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல், ராகேஷ் மற்றும் கோவிந்தை சரமாரியாகத் தாக்கியதோடு, மறைத்து வைத்திருந்த கத்தியால் இருவரையும் குத்தியுள்ளனர்.

பேக்கரி ஊழியர்களும் பொதுமக்களும் தடுத்ததை அடுத்து, அந்த கும்பல் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது. காயமடைந்த இருவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

இதேபோன்று திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே, ஓடும் ரயிலில் குஜராத் இளைஞரை கஞ்சா போதையில் இருந்த உள்ளூர் சிறுவர்கள் தாக்கி ‘ரீல்ஸ்’ எடுத்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  திருப்பூர் ரயில் நிலையத்தில் போலீஸாரையே கத்தியைக் காட்டி மிரட்டிய சம்பவம் சட்டம்-ஒழுங்கு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

தமிழகம் வடமாநிலத் தொழிலாளர்களுக்குப் புகலிடமாகவும், வேலைவாய்ப்பு வழங்கும் முதன்மை மாநிலமாகவும் இருந்து வந்த நிலையில், தற்போது அரங்கேறி வரும் இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் மாநிலத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாக அரசியல் கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் கவலை தெரிவித்துள்ளனர். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.