தெலுங்கானா மாநில அரசு கல்லூரியில் நிகழ்ந்த இந்த மனிதத்தன்மையற்ற செயல், சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசுப் பள்ளிகளும், கல்லூரிகளும் முறையாகக் கவனிக்கப்படாதபோது அவை எவ்வளவு மோசமான இடங்களாக மாறுகின்றன என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி. வைரலாகி வரும் அந்த வீடியோவில், பெண் ஆசிரியை ஒருவர் ஒரு மாணவியைக் குச்சியால் மிகக் கொடூரமாகத் தாக்குகிறார்.

அத்தோடு நில்லாமல், தனது கைகளால் அந்த மாணவியின் முதுகில் பலமாக அடிப்பதோடு, முடியைப் பிடித்து இழுத்து தரதரவென இழுத்துச் செல்லும் காட்சிகள் பார்ப்பவர்களின் நெஞ்சைப் பதற வைக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவி ஒரு தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது இந்தச் சம்பவத்தின் தீவிரத்தை இன்னும் அதிகமாக்கியுள்ளது.

​இந்தக் கொடூரமான தாக்குதல் நடக்கும்போது, சக மாணவிகள் அனைவரும் எந்த எதிர்வினையும் ஆற்றாமல் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது கூடுதல் வேதனையை அளிக்கிறது. ஒருவேளை ஆசிரியைக்கு எதிராகப் பேசினால் தங்களுக்கும் அதே நிலை ஏற்படும் என்ற அச்சத்தினால் அவர்கள் மௌனமாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

“இது ஒரு கல்வி நிலையமா அல்லது சித்திரக்கூடாமா?” என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அரசு நிறுவனங்களிலேயே இது போன்ற அத்துமீறல்கள் நடப்பது, கல்வித் துறையின் மீதான நம்பிக்கையைச் சிதைப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.