உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டம் பத்ரௌனாவில் பதிவான ஒரு பகீர் வீடியோ தற்போது இணையத்தில் விவாதப் பொருளாகியுள்ளது. ஏழு பேர் மட்டுமே பயணிக்கக்கூடிய ஒரு பொலிரோ காரில், சுமார் 15-க்கும் மேற்பட்ட பள்ளிச் சிறுவர்கள் மூச்சுத் திணறும் வகையில் அடைத்துச் செல்லப்படும் காட்சி அதில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை எக்ஸ் தளத்தில் பதிவிட்டவர், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைச் சுட்டிக்காட்டி மிகக் கடுமையான நையாண்டியுடன் தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார்.

“மேற்கத்திய நாடுகள் ஏன் நம்மை ஒரு குறிப்பிட்ட பெயரிட்டு (Cockroaches) அழைக்கிறார்கள் என்பதற்கு இதுதான் காரணம்” என்று பதிவிட்டுள்ள அவர், இந்தியாவின் இந்த நிலை குறித்து தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். ​”இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிச் செல்லும் பாதையில், தனது வளங்களை இப்படித்தான் மிகச்சரியாகப் பயன்படுத்துகிறது (Optimising resources). மற்ற நாடுகள் எரிபொருளை வீணாக்கிக் கொண்டிருக்கும்போது, இந்தியா இதுபோன்ற முறையில் குழந்தைகளை ஏற்றிச் சென்று ஆயிரக்கணக்கான லிட்டர் எரிபொருளைச் சேமிக்கிறது” என அந்தப் பதிவர் எகத்தாளமாகச் சாடியுள்ளார்.

“இந்த வேகத்தில் சென்றால் இந்தியாவை உலகின் நம்பர் 1 பொருளாதாரமாக மாறுவதிலிருந்து யாராலும் தடுக்க முடியாது” என அவர் பதிவிட்டுள்ள கருத்துக்கள், உண்மையில் நாட்டின் பாதுகாப்பற்ற போக்குவரத்துச் சூழலையும், குழந்தைகளின் உயிரோடு விளையாடும் அலட்சியப் போக்கையும் உலக அரங்கில் வெளிச்சம் போட்டுக் காட்டும் விதமாக அமைந்துள்ளது.