பிரேசிலைச் சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவர், விமானப் பயணத்தின்போது அழுதுகொண்டிருந்த சிறுவனுக்காகத் தனது இருக்கையை விட்டுக் கொடுக்க மறுத்த நிலையில், அது தொடர்பாகத் தன்னை அவதூறாகப் பேசி வீடியோ வெளியிட்ட பயணி மற்றும் விமான நிறுவனம் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.
NEW: A Brazilian woman refused to give up the window seat she PAID for to a crying child… went viral… got blasted online… and now she’s SUING the airline and the passenger who filmed her.
She says the backlash ruined her mental health and career.
Be honest — should she be… pic.twitter.com/nSmmD2N5Pq
— Tony Lane 🇺🇸 (@TonyLaneNV) December 10, 2025
ரியோ டி ஜெனிரோவிலிருந்து பெலோ ஹொரிசொன்டே செல்லும் கோல் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த ஜெனிஃபர் காஸ்ட்ரோ என்பவரிடம், ஜன்னல் ஓர இருக்கையை ஒரு சிறுவனுக்காக விட்டுத் தருமாறு சக பயணிகள் கேட்டுள்ளனர். ஆனால், தாம் பணம் செலுத்தி முன்பதிவு செய்த இருக்கையை விட்டுக் கொடுக்க அவர் மறுத்துவிட்ட நிலையில், அந்தச் சிறுவனின் தாய் ஜெனிஃபரை மோசமாகப் பேசியதோடு அதனை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி ஜெனிஃபருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்ட நிலையில், தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததற்காக அவர் தற்போது நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய ஜெனிஃபர், விமானப் பணிப்பெண்கள் தனக்கு எவ்வித உதவியும் செய்யவில்லை என்றும், அத்துமீறித் தன்னைப் படம் பிடித்தது தனது மனநலத்தையும் வங்கிப் பணியையும் பாதித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால், அந்தச் சிறுவனின் தாயோ தான் நேரடியாக எவ்வித மோதலிலும் ஈடுபடவில்லை என்றும், தனது மகனைச் சமாதானப்படுத்தவே முயன்றதாகவும் விளக்கம் அளித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஒருவரது அனுமதியின்றி வீடியோ எடுத்து வெளியிடுவது மற்றும் பொதுவெளியில் ஒருவரை அவமானப்படுத்துவது போன்ற செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளதாக ஜெனிஃபர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தற்போது பிரேசிலில் தனிநபர் உரிமை மற்றும் விமானப் பயண ஒழுங்குமுறைகள் குறித்த புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
