சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுநர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இளையான்குடியை அடுத்த கொம்படி மதுரை கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என்ற ஆட்டோ ஓட்டுநர், அதே பகுதியைச் சேர்ந்த 6-ம் வகுப்பு பயிலும் சிறுமியை தின்பண்டங்கள் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர், அச்சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயிடம் தெரிவிக்க, அவர் உடனடியாக சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் துரிதமாகச் செயல்பட்ட காவல்துறையினர், கார்த்திக் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். திருமணமான ஒருவரே சிறுமிக்கு இழைத்த இக்கொடூரச் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.