சிந்தியா ப்ரொடக்ஷன் ஹவுஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் தினேஷ் தீனா இயக்கத்தில் உருவாகியுள்ள “அனலி” திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இப்படத்தின் நாயகியும் தயாரிப்பாளருமான சிந்தியா லூர்டே, இது தனது மூன்றாவது தயாரிப்பு என்றும், இதில் 90-களில் விஜயசாந்தி நடித்தது போன்ற ஒரு முழுநீள ஆக்ஷன் நாயகி கதாபாத்திரத்தில் டூப் போடாமல் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்தப் படத்தில் கதாநாயகன் என்று யாரும் இல்லை என்றும், 15 ஆண்டுகளுக்குப் பிறகு வில்லனாக ரீ-என்ட்ரி கொடுக்கும் சக்தி வாசு மற்றும் பாலிவுட் நடிகர் கபீர் துஹான் சிங் எனப் பல வில்லன்கள் நடித்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்திய சினிமா வரலாற்றிலேயே முதன்முறையாக 10,000 கன்டெய்னர்கள் கொண்ட யார்டில் பிரம்மாண்ட செட் அமைத்து 30 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியது இப்படத்தின் தனிச்சிறப்பு என சிந்தியா கூறினார். ஜனவரி 2-ஆம் தேதி ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் மூலம் வெளியாகவுள்ள இப்படம், விறுவிறுப்பான கதையம்சத்துடன் ரசிகர்களைக் கவரும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், நடிகர் விஜய் இரண்டு ஆண்டுகளுக்குள் மீண்டும் சினிமாவுக்கு வருவார் என்றும், அவர் தனது தயாரிப்பில் நிச்சயம் நடிப்பார் என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்தார்.
