தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமான நடிகர் விஜய்யும், இசையுலகின் ராக்ஸ்டாரான அனிருத்தும் இணைந்து உருவாக்கிய பாடல்கள் அனைத்துமே ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்த மாபெரும் வெற்றிப் படைப்புகளாக அமைந்தவை.

மேலும் ‘கத்தி’ திரைப்படத்தில் தொடங்கிய இவர்களது பிரம்மாண்டமான கூட்டணி, ‘மாஸ்டர்’, ‘பீஸ்ட்’, ‘லியோ’ எனத் தொடர்ந்து தற்போது விஜய்யின் இறுதித் திரைப்படமாக உருவெடுத்துள்ள ‘ஜனநாயகன்’ வரை ரசிகர்களுக்கு மறக்க முடியாத இசை விருந்தை அளித்துள்ளது. விஜய் – அனிருத் காம்போனாலே தியேட்டரில் திருவிழா கோலாகலம் தான் என்ற பிம்பத்தை ஒவ்வொரு முறையும் இவர்கள் நிரூபித்துக் காட்டியுள்ளனர்.

இந்நிலையில், நடிகர் விஜய்யுடன் இணைந்து பயணித்த அழகான தருணங்களை நினைவுகூர்ந்து இசையமைப்பாளர் அனிருத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு ரசிகர்களின் மனதைத் தொட்டுள்ளது. “உங்களுடன் பயணித்தது ஒரு அற்புதமான மற்றும் மறக்க முடியாத அனுபவம், மிக்க நன்றி விஜய் சர்!” என்று அவர் தனது பதிவில் நன்றியையும் அன்பையும் பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில் திரையுலகில் தளபதியின் இந்த மகத்தான பயணத்தில் தானும் ஒரு முக்கியப் அங்கமாக இருந்து, அவரது பல மாஸ் பாடல்களுக்கு இசையமைத்ததை எண்ணிப் பெருமிதம் கொள்வதாக அனிருத் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

விஜய்யின் கலைப்பயணத்தில் அனிருத்தின் இசை மிக முக்கியமான பங்கு வகித்ததை மறுக்க முடியாது. திரையரங்குகளில் ரசிகர்களை ஆடவைக்கும் துள்ளல் பாடல்கள் மட்டுமின்றி, உணர்ச்சிப்பூர்வமான பின்புல இசையிலும் இருவரும் சேர்ந்து நிகழ்த்திய மேஜிக் தமிழ் சினிமாவின் வரலாற்றில் என்றென்றும் பேசப்படும்.

விஜய்யின் திரைப் பயணம் நிறைவடையும் இந்தத் தருணத்தில், அனிருத்தின் இந்த உருக்கமான நன்றிப் பதிவு விஜய் ரசிகர்களையும் திரைத்துறையினரையும் பெரும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதுடன், சோஷியல் மீடியாவிலும் தீயாகப் பரவி வருகிறது.