நல்ல உடல்வாகு பெற வேண்டும் என்ற ஆசையில் ஜிம்முக்குச் சென்ற 19 வயது இளைஞரின் உயிர், அவர் குடித்த புரோட்டீன் ஷேக்காலேயே பறிபோன சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உபி-யின் கன்னோஜ் மாவட்டத்தைச் சேர்ந்த சச்சின் என்ற இளைஞர், கடந்த சில தினங்களாக ஜிம்முக்குச் சென்று வந்துள்ளார். அப்போது உடல் எடையை அதிகரிக்கவும், தசைகளை வலுப்படுத்தவும் அங்கிருந்தவர்களின் பரிந்துரையின் பேரில் புரோட்டீன் பவுடர் வாங்கிப் பயன்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், அந்த புரோட்டீன் ஷேக்கை குடித்த சில நிமிடங்களிலேயே அவருக்குக் கடுமையான வயிற்று வலி மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டும் சிகிச்சை பலனின்றி சச்சின் உயிரிழந்தார்.
சச்சினின் திடீர் மரணம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தப் புரோட்டீன் பவுடரில் ஏதேனும் நச்சுத்தன்மை இருந்ததா அல்லது கலப்படமான தயாரிப்பா என்பது குறித்து ஆய்வு செய்ய அந்தப் பவுடர் மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
“இளைஞர்கள் மருத்துவர்களின் முறையான ஆலோசனை இன்றி இது போன்ற சப்ளிமெண்ட்களை உட்கொள்வது உயிருக்கே ஆபத்தாக முடியும்” என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஜிம் கலாச்சாரம் அதிகரித்து வரும் வேளையில், போலிப் புரோட்டீன் பவுடர்களால் ஒரு இளம் உயிர் பலியானது அந்தப் பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
