செங்கல்பட்டு அருகே கஞ்சா போதைக்கு அடிமையான மகனை, அவரது தந்தையே அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுராந்தகம் அருகே உள்ள சிலாவட்டம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு, போதை பழக்கம் காரணமாகத் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நின்று போனதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், வீட்டில் உள்ளவர்களுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று போதை தலைக்கேறிய நிலையில் தனது தாய் மற்றும் குடும்பத்தினரை அவர் அறிவாளால் தாக்க முயன்றதாகத் தெரிகிறது.

மேலும் மகனின் இந்த விபரீதச் செயலால் ஆவேசமடைந்த தந்தை, குடும்பத்தினரைக் காப்பாற்றும் நோக்கில் அருகில் இருந்த இரும்பு கம்பியால் மகனைத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, மகனைக் கொன்ற தந்தையைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போதைப் பழக்கத்தால் ஒரு குடும்பமே சிதைந்து போன இந்தச் சம்பவம் அந்த கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.