சென்னை நெற்குன்றம் பகுதியில் உள்ள சக்தி நகர் 12-வது தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (40). இவர் தனது வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டிருந்தார். அந்த வீட்டில் ஸ்நேகா என்ற பெண் வசித்து வந்தார். இந்நிலையில், கார்த்திகேயன் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்த சமயத்தில், மர்ம நபர்கள் வீட்டின் கதவைத் திறந்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த பணத்தைத் திருடிச் சென்றனர்.

இது குறித்து கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில் கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அதே வீட்டில் வசிக்கும் ஸ்நேகா மற்றும் அவரது நண்பரான ஆட்டோ டிரைவர் தீபக் ஆகியோர் இணைந்து இந்தத் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும் வீட்டு உரிமையாளர் இல்லாத நேரத்தைப் பயன்படுத்திக் கொண்ட ஸ்நேகா, தன்னிடம் இருந்த மாற்றுச் சாவி மூலம் கதவைத் திறந்து, தீபக்கின் உதவியுடன் பணத்தைக் கொள்ளையடித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து திருடப்பட்ட பணத்தைப் பறிமுதல் செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.