நடிகர் சூர்யா தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் தனது 45-வது படமான ‘கருப்பு’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராக இருப்பதால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, வெங்கி அட்லூரி இயக்கத்தில் மமிதா பைஜு, ராதிகா சரத்குமார் மற்றும் ரவீனா தாண்டன் ஆகியோருடன் இணைந்து நடித்த ‘சூர்யா 46’ படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்தது.
இந்தத் திரைப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு திரைக்கு வரவுள்ளது. ‘சூர்யா 46’ படத்தின் கதை குறித்து தயாரிப்பாளர் நாக வம்சி சமீபத்தில் பகிர்ந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கதை 45 வயதுடைய ஒரு நபருக்கும் 20 வயது இளம்பெண்ணுக்கும் இடையிலான உறவை மையமாகக் கொண்டது என்றும், இதில் சூர்யாவின் கதாபாத்திரம் ‘கஜினி’ படத்தின் சஞ்சய் ராமசாமி பாணியில் உணர்ச்சிகரமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக அமையும் எனத் தெரிகிறது.
