இன்றைய கார்ப்பரேட் உலகில் நிலவி வரும் ‘வேலை-வாழ்க்கை சமநிலை’ (Work-Life Balance) குறித்த விவாதம் இளைஞர்கள் மத்தியில் தீவிரமடைந்துள்ள நிலையில், பெங்களூருவைச் சேர்ந்த தீக்ஷா என்ற 22 வயது இளம்பெண்ணின் இன்ஸ்டாகிராம் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பியுள்ளது. கல்லூரி படிப்பை முடித்த கையோடு, கேம்பஸ் இன்டர்வியூ மூலம் மாதம் 60,000 ரூபாய் சம்பளத்தில் மார்க்கெட்டிங் வேலை கிடைத்ததால், அவர் பெங்களூருவிற்கு குடியேறியுள்ளார்.
View this post on Instagram
இந்த வேலை தனக்குப் புதிய விஷயங்களைக் கற்றுக்கொடுத்தாலும், கார்ப்பரேட் வாழ்க்கை முறை தனது நிம்மதியைப் பறிப்பதாக அவர் உணர்ந்துள்ளார். இதனால், கையில் அடுத்த வேலை எதுவும் இல்லாத நிலையிலும், தனது கைநிறைய சம்பளம் தரும் வேலையை அவர் அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார்.
தனது இந்த திடீர் முடிவு குறித்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோவில் பேசியுள்ள தீக்ஷா, “காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வேலை என்று கூறிவிட்டு, இரவு 9 மணி வரை வேலை வாங்குகிறார்கள். வீட்டிற்கு வருவது, சாப்பிடுவது, தூங்குவது, மறுநாட்காலையில் மீண்டும் அதே இயந்திரத்தனமான வாழ்க்கைக்கு ஓடுவது.. இதுதான் கார்ப்பரேட்Routine ஆக உள்ளது. நம் சொந்த வாழ்க்கையை அனுபவிக்க வார இறுதி நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்காக வாரம் முழுவதும் காத்திருக்க வேண்டியுள்ளது.
என் வாழ்க்கையை ஒரே இடத்தில் முடக்க நான் விரும்பவில்லை. கையில் அடுத்த வேலை இல்லை என்றாலும், ரிஸ்க் எடுத்தால் தான் வாழ்க்கையில் சுவாரஸ்யம் இருக்கும். இப்போது வேலை இல்லாத இந்த காலக்கட்டத்தை நான் ஜாலியாக அனுபவிக்கப் போகிறேன். எதுவும் செட் ஆகவில்லை என்றால், மீண்டும் முதலிலிருந்து தொடங்கிக் கொள்ளலாம்” என்று நெஞ்சுறுதியோடு பேசியுள்ளார். இந்த வீடியோவை லட்சக்கணக்கான இளைஞர்கள் பகிர்ந்து, “9 to 9 வேலை என்பது தான் இன்றைய கார்ப்பரேட் எதார்த்தம்” என்று தீக்ஷாவின் தைரியமான முடிவிற்கு ஆதரவாகக் கமெண்ட் செய்து ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.
