திருமண வாழ்க்கையில் தம்பதிகளுக்கு இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளும், தற்காலிக மௌனமும் குற்றவியல் கொடுமையாக மாறாது என்று உச்ச நீதிமன்றம் மிக முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. வரதட்சணை கொடுமை மற்றும் மனைவி தற்கொலைக்குத் தூண்டியதாகக் கூறப்பட்ட வழக்கில், கணவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. கணவர் தன்னிடம் 13 நாட்களாகப் பேசவில்லை என்ற மன உளைச்சலால் மனைவி தற்கொலை செய்துகொண்டதாகத் தொடரப்பட்ட இந்த வழக்கை எதிர்த்து, கணவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் அதுல் எஸ். சந்தூர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, சென்னை உயர் நீதிமன்றத்தின் தண்டனையை அதிரடியாக ரத்து செய்து கணவரை விடுதலை செய்தது. வலுவான சான்றுகள் இல்லாத நிலையில், 13 நாட்கள் மனைவியுடன் பேசாமல் இருந்தது மட்டுமே ஐபிசி பிரிவு 498A-ன் கீழ் வரும் கொடுமை என்ற வரம்பிற்குள் வராது என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளனர்.
ஒரு செயல் தற்கொலைக்குத் தூண்டும் அளவுக்கு மிகவும் தீவிரமானதாகவும், அழுத்தமானதாகவும் இருக்க வேண்டுமே தவிர, சாதாரண உணர்வுப்பூர்வமான சண்டைகள் மற்றும் மன அழுத்தங்களை குற்றமாகக் கருத முடியாது என நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த வழக்கின் பின்னணியின்படி, தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் பெற்றோர் திருமணத்தின்போது 3 லட்சம் ரூபாய், 20 சவரன் தங்கம் மற்றும் சீர்வரிசைப் பொருட்களை வரதட்சணையாகக் கொடுத்துள்ளனர்.
எனினும், கூடுதலாகப் பணம் கேட்டு கணவர் குடும்பத்தினர் பெண்ணைக் கொடுமைப்படுத்தியதாகவும், பெற்றோர் வீட்டில் பேசுவதைத் தடுக்க முயன்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. தடையை மீறிப் பேசியதால் கணவர் தன்னிடம் பேசுவதை நிறுத்தியதால் மனமுடைந்த பெண் பெற்றோர் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக கணவர், மாமனார், மாமியார் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கீழ் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தால் தண்டனை உறுதி செய்யப்பட்டிருந்தது. ஆனால், தற்போது உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் குடும்பக் கருத்து வேறுபாடுகளைக் கையாள்வது குறித்து சட்டரீதியான முக்கிய விளக்கத்தை அளித்து தீர்ப்பளித்துள்ளது.
