மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் நகரின் நியூ கஞ்சன்பூர் பகுதியில் நெஞ்சை உலுக்கும் கொடூரச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இப்பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில் இருந்து கடந்த இரண்டு நாட்களாகக் கடுமையான துர்நாற்றம் வீசியதை அடுத்து, வீட்டின் உரிமையாளர் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றபோது அதிர்ச்சியில் உறைந்து போயினர். அங்கு சமையலறையில் பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
அவரது கழுத்தில் சிவப்பு மற்றும் பச்சை நிற துப்பட்டா கட்டப்பட்டிருந்தது, அதன் மறுமுனை மின்விசிறியில் தொங்கியபடி இருந்துள்ளது. இந்த அதிர்ச்சிக்கு நடுவே, அதே வீட்டிற்குள் பயத்தில் நடுங்கியபடி அமர்ந்திருந்த அந்தப் பெண்ணின் 8 வயது சிறுவனையும் போலீஸார் மீட்டனர். சம்பவத்தின் தீவிரத்தைக் கருதி தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது.
போலீஸ் விசாரணையில், இறந்து கிடந்தவர் நேகா சிங் (35) என்பது தெரியவந்தது. நேகாவின் முதல் கணவர் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மயங்க் சிங் என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டு இந்த வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். மீட்கப்பட்ட 8 வயது சிறுவன் நேகாவின் முதல் கணவருக்குப் பிறந்தவன் ஆவான். அச்சத்தில் இருந்த அந்தச் சிறுவனிடம் போலீஸார் விசாரித்தபோது, “கடந்த இரண்டு நாட்களாக அப்பாதான் என்னை அம்மாவிடம் போகவிடாமல் தடுத்தார், அம்மா வெளியே போயிருப்பதாகப் பொய் சொன்னார்” என்று கண்ணீருடன் வாக்குமூலம் அளித்துள்ளான்.
நேகா இறந்து 3 நாட்கள் ஆகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சம்பவத்திற்குப் பிறகு நேகாவின் கணவர் மயங்க் சிங் தலைமறைவாகியுள்ளார். அவர் ஒரு ரயில்வே கேட் அருகே தனது பைக்கை போட்டுவிட்டு தப்பி ஓடியதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், மனைவியைக் கொலை செய்துவிட்டு தற்கொலை போல நாடகமாடிவிட்டு கணவர் தப்பியிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே உண்மை தெரியவரும் என்றும், தப்பியோடிய கணவரைத் தனிப்படை அமைத்துத் தேடி வருவதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
