டெல்லியைச் சேர்ந்த பிரபல துணி வியாபாரியான நவாப் மைதீன் ஹுசைனி (வயது 38) என்பவர், விஷப்பாம்பை கையில் பிடித்து விளையாடியபோது அது கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். ஜாமியா நகர் பகுதியில் வசித்து வந்த இவர், அண்மையில் தனது வீட்டின் அருகே வந்த கொடிய விஷமுள்ள பாம்பு ஒன்றை லாவகமாகப் பிடித்துள்ளார். பொதுவாகவே பாம்புகள் மீது ஆர்வம் கொண்ட அவர், அதனை உடனடியாகப் வனத்துறையினரிடம் ஒப்படைக்காமல், தனது கைகளில் சுற்றிக்கொண்டும், கழுத்தில் போட்டுக்கொண்டும் விளையாடியுள்ளார். மேலும், அதனைத் தனது நண்பர்களிடம் காட்டி வேடிக்கை பார்த்ததுடன், வீடியோவும் எடுத்துள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக அந்தப் பாம்பு அவரது கையில் பலமாகக் கடித்தது.
பாம்பு கடித்த சில நிமிடங்களிலேயே நவாப் மைதீன் ஹுசைனி மயங்கி விழுந்ததைத் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், அவரை உடனடியாக மீட்டு அருகில் உள்ள ஹோலி ஃபேமிலி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு அவசரப் பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், விஷம் உடல் முழுவதும் வேகமாகப் பரவியதால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த தொழிலதிபர் நவாப் மைதீன் ஹுசைனிக்கு மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், இதுபோன்று ஆபத்தான முறையில் வனவிலங்குகளுடனும், பாம்புகளுடனும் விளையாட வேண்டாம் எனப் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
