தமிழ் சினிமாவின் இமயமலை என்று போற்றப்படும் இயக்குநர் பாரதிராஜா அவர்கள், சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி திரையுலகினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. தனது மகன் மனோஜின் மறைவால் ஏற்பட்ட ஈடுசெய்ய முடியாத இழப்பினால் கடும் மன உளைச்சலில் இருந்த அவர், அதிலிருந்து மீண்டு வர மலேசியாவில் உள்ள தனது மகள் வீட்டில் சில காலம் தங்கி ஓய்வெடுத்து வந்தார். அண்மையில் சென்னை திரும்பிய அவர் நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் தங்கியிருந்த நிலையில், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும், அவரது உடல்நிலை குறித்து அச்சப்படத் தேவையில்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இது தற்செயலாக ஏற்பட்ட உடல்நலக் குறைவு அல்ல என்றும், நீண்ட பயணத்திற்குப் பிறகு அவர் வழக்கமாக மேற்கொள்ளும் மருத்துவப் பரிசோதனைகளுக்காகவே (Routine Check-up) அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் விளக்கம் அளித்துள்ளனர். விரைவில் அவர் பூரண நலம்பெற்று வீடு திரும்புவார் என அவரது ரசிகர்களும் திரையுலக நண்பர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
