அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கோடி கணக்கில் பணம் பெற்று மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற விசாரணையைத் தீவிரப்படுத்த அமலாக்கத்துறை (ED) முயன்று வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கில் செந்தில் பாலாஜியை முறைப்படி விசாரிப்பதற்கான அனுமதியைக் கோரி, தமிழ்நாடு அரசு ஆளுநர் ஆர்.வி.அர்லேகருக்கு அதிகாரப்பூர்வமாக முக்கியக் கோப்பு ஒன்றை அனுப்பியுள்ளது.

தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இந்தக் கோப்பிற்குத் தனது முறைப்படியான ஒப்புதலை அளித்ததைத் தொடர்ந்து, அது உடனடியாக ஆளுநர் மாளிகையான ராஜ் பவனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆளுநர் அர்லேகர் இந்த கோப்பிற்குத் தங்களின் இறுதி அனுமதியை அளிக்கும் பட்சத்தில், தமிழக அரசு இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2011 முதல் 2016 வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராகச் செந்தில் பாலாஜி பதவி வகித்தபோது இந்த வேலைவாய்ப்பு மோசடி நடந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை ஏற்கனவே குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ள நிலையில், செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தபோது குற்றம் நடந்ததாகக் கூறப்படுவதால் சட்டப்படி அவரை விசாரிப்பதற்கான இறுதி அனுமதி வழங்கும் அதிகாரம் ஆளுநரிடமே உள்ளது.

இதற்காக அமலாக்கத்துறை கடந்த ஆண்டு மே மாதமே அப்போதைய ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் அனுமதி கோரியிருந்ததும், முந்தைய திமுக அரசுடன் ஏற்பட்ட நடைமுறைச் சிக்கல்களால் அந்த அனுமதி வழங்குவதில் பெரும் தாமதம் ஏற்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. தற்போது உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களின்படி, அனைத்து சட்ட அம்சங்களையும் முறையாக ஆய்வு செய்து, ஆதாரங்கள் அடங்கிய பென் டிரைவ் மற்றும் ரகசியக் குறிப்புகளுடன் தலைமைச் செயலாளர் சாய் குமார் வழியாக இந்தக் கோப்பு ஆளுநரின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஆளுநரின் இந்த அடுத்தகட்ட முடிவு, தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளையும் திருப்பங்களையும் ஏற்படுத்தியுள்ளது.