சர்வதேச விமானத்தில் பயணம் செய்த இளம் பெண் ஒருவர், தான் முன்பதிவு செய்த வசதியான இருக்கையை மற்றவருக்காக விட்டுக்கொடுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்ணின் தந்தை தனது மகள் பாதுகாப்பாகவும் வசதியாகவும் பயணிக்க வேண்டும் என்பதற்காக, அதிக மைல்கள் செலவழித்து ‘பிரீமியம் செலக்ட்’ பகுதியில் ஜன்னல் ஓர இருக்கையை முன்பதிவு செய்திருந்தார்.

ஆனால், விமானத்தில் இருந்த ஒரு நபர் தனது மனைவியுடன் அமர வேண்டும் எனக் கூறி, அந்தப் பெண்ணை வற்புறுத்தி இருக்கையை மாற்றச் செய்துள்ளார். இறுதியில் அந்த நபர் தனது வசதியான இருக்கையை விட்டுக்கொடுக்காமல், அந்தப் பெண்ணை மட்டும் குறைவான வசதி கொண்ட இடத்திற்கு மாற்றியது பின்னரே தெரியவந்தது.

இந்தச் சம்பவம் குறித்து ரெடிட்டில் பதிவிட்ட தந்தை, தனது மகளுக்கு இது ஒரு முக்கிய பாடம் என்று குறிப்பிட்டுள்ளார். பயணம் செய்யும் போது மற்றவர்களின் அழுத்தத்திற்குப் பணிந்து நமது வசதியை விட்டுக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்றும், ‘வேண்டாம்’ என்று சொல்வது தவறல்ல என்றும் அவர் தனது மகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரத்தில் பலரும் அந்தப் பெண்ணுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். தங்களுக்குத் தேவையான இருக்கையை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்பவர்களிடம், கடைசி நேரத்தில் இருக்கையை மாற்றச் சொல்லி வற்புறுத்துவது முறையற்றது என்று சமூக வலைதள பயனர்கள் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.