தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணிகளை உறுதிப்படுத்துவதிலும் கட்சிப் பணிகளை வேகப்படுத்துவதிலும் தீவிரமாக இறங்கியுள்ளன. திமுக தலைமையிலான கூட்டணி தற்போதைய கட்சிகளுடன் வலுவாகத் தொடரும் நிலையில், அதிமுக மற்றும் பாஜக தலைமையிலான கூட்டணிகளில் யார் இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

குறிப்பாக, என்.டி.ஏ கூட்டணியில் இருந்து விலகியிருந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் மீண்டும் இணைவார்களா என்பது குறித்த விவாதங்கள் அரசியல் வட்டாரத்தில் பரவலாக எழுந்துள்ளன. இந்நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிடுவது குறித்துப் பேசிய காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து மதுரையில் விளக்கம் அளித்த தினகரன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தங்களை கூட்டணியில் இணைய அழைப்பது உண்மைதான் என்றும், பல கட்சிகள் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிடுவது குறித்துத் தான் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்றும், அவ்வாறு போட்டியிடுவதாக இருந்தால் அதைத் தானே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.