2025 ஆம் ஆண்டில் திரையுலகில் திருமணங்கள் மட்டுமின்றி, சில பிரபல ஜோடிகளின் விவாகரத்துகளும் சமூக ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்களில் பெரும் கவனம் பெற்றுள்ளன. திரை நட்சத்திரங்களின் தனிப்பட்ட வாழ்க்கை மாற்றங்கள் ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளன. அந்த வகையில், இந்த ஆண்டில் விவாகரத்து பெற்ற சில முக்கிய திரை பிரபலங்கள் குறித்து பார்ப்போம்.

ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வரும் ஜி.வி.பிரகாஷ் குமார், 2013 ஆம் ஆண்டு தனது பள்ளித் தோழியும், பிரபல பின்னணிப் பாடகியுமான சைந்தவியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ‘ஆன்வி’ என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாக கடந்த ஆண்டு மே மாதம் அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து, பரஸ்பர சம்மதத்தின் அடிப்படையில் விவாகரத்து கோரி சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். விசாரணையின் போது, குழந்தையின் பராமரிப்பை சைந்தவி மேற்கொள்வதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என ஜி.வி.பிரகாஷ் தெரிவித்தார். இதையடுத்து, நீதிமன்றம் இருவருக்கும் விவாகரத்து வழங்கியது.

மீரா வாசுதேவன்

பிரபல மலையாள நடிகை மீரா வாசுதேவன், மூன்றாவது முறையாக விவாகரத்து பெற்ற செய்தி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகர் மோகன்லால் நடித்த ‘தன்மந்த்ரா’ படத்தின் மூலம் அறிமுகமான அவர், பின்னர் முன்னணி நடிகையாக உயர்ந்தார். தமிழில் ‘உன்னை சரணடைந்தேன்’, ‘அடங்க மறு’, ‘ஜெர்ரி’, ‘அறிவுமணி’, ‘கத்திக்கப்பல்’, ‘ஆட்ட நாயகன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

2005 ஆம் ஆண்டு பிரபல ஒளிப்பதிவாளரின் மகனை காதலித்து திருமணம் செய்த மீரா, கருத்து வேறுபாடு காரணமாக 2010 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். பின்னர் மலையாள நடிகர் ஜான் கொக்கனை மறுமணம் செய்து, ‘அரிஹரா’ என்ற மகனை பெற்றார். அந்த உறவும் நீடிக்காமல் விவாகரத்தில் முடிந்தது.

இதனையடுத்து, 2024 ஏப்ரலில் ஒளிப்பதிவாளர் விபின் புதியங்கத்தை திருமணம் செய்த மீரா வாசுதேவன், இந்த ஆண்டில் அவரையும் விவாகரத்து செய்ததாக தகவல் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

பிரபல ஹாலிவுட் நடிகை ஜெசிகா ஆல்பா, தனது கணவர் கேஷ் வாரனை இந்த ஆண்டு விவாகரத்து செய்தார். 17 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்த இந்த தம்பதியின் பிரிவு ஹாலிவுட் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளானது.

அதேபோல், ஹாலிவுட்டின் நட்சத்திர ஜோடியாக அறியப்பட்ட நடிகையும் பாடகியுமான ஜெனிபர் லோபஸ் – நடிகர் பென் அப்லெக் தம்பதியின் உறவும் விவாகரத்தில் முடிந்தது. நீண்ட காலமாக காதலித்து வந்த இருவரும் 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஜெனிபர் லோபஸுக்கு பென் அப்லெக் நான்காவது கணவராவார். இதற்கு முன்பு அவர் நடிகர் ஓஜானி நோவா, நடனக் கலைஞர் கிறிஸ் ஜட், பாடகர் மார்க் ஆண்டனி ஆகியோரை திருமணம் செய்திருந்தார்.