திருவிழாக்களில் இடம்பெறும் படகு போன்ற ராட்டினத்தில் ஆபத்தான முறையில் சாகசம் செய்ய முயன்ற இளைஞர் ஒருவர், இரும்பு கம்பியில் மோதி படுகாயமடைந்த அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், ராட்டினம் மெதுவாக இயங்கத் தொடங்கியதும் அதில் ஏற முயன்ற அந்த இளைஞர், தனது திறமையைக் காட்ட முற்படும்போது எதிர்பாராதவிதமாக ராட்டினத்தின் மேல் பகுதியில் இருந்த இரும்பு சட்டத்தில் பலமாக மோதினார்.

 

இந்த விபத்தில் நிலைகுலைந்த அவர் மயக்க நிலைக்குச் சென்ற நிலையில், அங்கிருந்த சிறுவர்கள் அவரை கீழே விழாமல் தாங்கிப் பிடித்ததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. அஜாக்கிரதையாகவும் முறையான பாதுகாப்பு வசதிகள் இன்றியும் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற சாகசங்கள் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதற்கு இச்சம்பவம் ஒரு சாட்சியாக அமைந்துள்ளது.

இந்த வீடியோவை எக்ஸ் தளத்தில் ஆயிரக்கணக்கானோர் பார்த்துள்ள நிலையில், தேவையற்ற ஹீரோயிசம் மற்றும் அதீத தன்னம்பிக்கை விபத்துகளுக்கே வழிவகுக்கும் என்று நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.