இன்றைய நவீன சூழலில் ஸ்மார்ட்போன் என்பது நமது அன்றாட வாழ்வின் பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டது. ஆனால், பல நேரங்களில் மொபைலில் சார்ஜரை செருகும்போது அது சரியாக கனெக்ட் ஆகாமலோ அல்லது மெதுவாக சார்ஜ் ஏறும் பிரச்சனையோ ஏற்படுவதை நாம் கவனித்திருப்போம். இதற்கு பெரும்பாலான காரணம், நமது போனின் சார்ஜிங் போர்ட்டிற்குள் உடைகள், பைகள் அல்லது வெளிப்புறக் காற்றினால் சேரும் தூசி மற்றும் அழுக்குகள்தான்.

இந்த தூசியை வெளியேற்ற முறையான வழிகளைப் பின்பற்றாவிட்டால், போனின் சார்ஜிங் போர்ட் நிரந்தரமாகப் பழுதாகிவிடும் அபாயம் உள்ளது. சார்ஜிங் போர்ட்டில் தூசி சேர்ந்திருப்பதை உணர்ந்ததும், பலர் உடனடியாகச் செய்யும் மிகப்பெரிய தவறு என்னவென்றால், கையில் கிடைக்கும் ஊசி, சேஃப்டி பின், மெல்லிய கம்பி அல்லது மரத்தாலான டூத்பிக்  போன்ற கூர்மையான பொருட்களை வைத்து போர்ட்டை குடைவதுதான்.

இவ்வாறு கூர்மையான பொருட்களை உள்ளே செலுத்தும்போது, போர்ட்டின் உட்பகுதியில் இருக்கும் மென்மையான மின் இணைப்புகள்   முறிந்துபோகவோ அல்லது சேதமடையவோ அதிக வாய்ப்புள்ளது. இதனால் போன் முற்றிலும் சார்ஜ் ஆகாமல் போய், பெரிய செலவில் போர்ட்டையே மாற்ற வேண்டிய நிலை ஏற்படும். அப்படியானால், சார்ஜிங் போர்ட்டை எப்படித்தான் பாதுகாப்பாக சுத்தம் செய்வது? இதற்கு மிகச் சிறந்த மற்றும் எளிமையான வழி ‘கம்ப்ரஸ்டு ஏர்’  எனப்படும் அழுத்தப்பட்ட காற்று தெளிப்பான்களைப் பயன்படுத்துவதாகும்.

இதன் மூலம் போர்ட்டிற்குள் இருக்கும் தூசிகள் எந்தவிதப் பாதிப்பும் இன்றி வெளியேறிவிடும். ஒருவேளை அது இல்லை என்றால், மென்மையான காட்டன் பட்ஸ்   அல்லது மிகவும் மெல்லிய பிரஷ்ஷை வைத்து மிகக் கவனமாகவும் லேசாகவும் அழுக்கினை வெளியே எடுக்கலாம். எந்தச் சூழலிலும் அதிக அழுத்தம் கொடுத்து குடையக்கூடாது. அதேபோல, சார்ஜிங் போர்ட்டை சுத்தம் செய்ய தண்ணீரையோ அல்லது திரவ வடிவிலான எவ்வித கிளீனர்களையும் நேரடியாகப் பயன்படுத்தக்கூடாது.

அதுமட்டுமின்றி, தூசியைப் போக்குகிறேன் என்று வாயால் பலமாக ஊதுவதையும் தவிர்க்க வேண்டும்; ஏனெனில் நமது மூச்சுக் காற்றில் இருக்கும் ஈரப்பதம் போர்ட்டின் உட்பகுதியை பாழாக்கிவிடும். இதுபோன்ற எளிய மற்றும் சரியான பராமரிப்பு முறைகளைப் பின்பற்றுவதன் மூலம், சார்ஜிங் பிரச்சனைகளைத் தவிர்ப்பதோடு நமது ஸ்மார்ட்போனின் ஆயுளையும் கணிசமாக உயர்த்த முடியும்.