பெங்களூருவை இந்தியாவின் தலைநகராக அறிவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக டெல்லியைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலத்தின் பதிவு, சமூக வலைதளங்களில் டெல்லி மற்றும் பெங்களூருவாசிகளுக்கு இடையே ஒரு ‘டிஜிட்டல் போரை’ உருவாக்கியுள்ளது.
கடந்த சில மாதங்களாக பெங்களூருவில் வசித்து வரும் சிம்ரிதி மகிஜா என்ற அந்த இளம்பெண், தலைநகர் டெல்லியுடன் ஒப்பிடுகையில் பெங்களூருவில் நிலவும் தூய்மையான காற்று, பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் மேம்பட்ட உள்கட்டமைப்பு ஆகிய மூன்று முக்கிய காரணங்களை முன்வைத்து பெங்களூருவே தலைநகராகத் தகுதியானது எனக் கூறியுள்ளார்.
View this post on Instagram
டெல்லியின் மாசடைந்த காற்று மற்றும் நெரிசலான சாலைகள் வெளிநாட்டுப் பயணிகளுக்கு நற்பெயரைத் தராது என்றும், நவீன நகரமான பெங்களூருவே அவர்களை வரவேற்கச் சிறந்த இடம் என்றும் அவர் வாதிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இணையவாசிகள் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
பெங்களூருவின் பெருமைகளை ஒப்புக்கொண்டாலும், அங்குள்ள போக்குவரத்து நெரிசல் மற்றும் குடிநீர் தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டி அந்த நகரைச் சேர்ந்தவர்களே இவரது கருத்தை முழுமையாக ஏற்கவில்லை. புவியியல் முக்கியத்துவம் மற்றும் வரலாற்றுப் பின்னணிகளைக் கருத்தில் கொள்ளாமல் இத்தகைய கோரிக்கையை வைப்பதாகப் பலர் விமர்சித்துள்ள நிலையில், ஹைதராபாத், சென்னை அல்லது புனே போன்ற நகரங்களையும் ஏன் தலைநகராகக் கருதக்கூடாது என்ற விவாதமும் எழுந்துள்ளது.
நகரங்களுக்கு இடையிலான இந்த ஆரோக்கியமான மோதல், இந்தியாவின் பெருநகரங்களில் நிலவும் அடிப்படை வசதிகள் குறித்த விவாதத்தை மீண்டும் முன்னெடுத்துள்ளது.
