தமிழக வெற்றிக் கழக (தவெக) உயர்மட்ட நிர்வாகக் குழு மாநில ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

“ஓ. பன்னீர் செல்வம், அனைத்து மாவட்டச் செயலாளர்களுடனும் நடத்திய ஆலோசனையின் அடிப்படையில், எந்த காலகட்டத்திலும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.-வில் தன்னை இணைத்துக் கொள்ளப் போவதில்லை என உறுதியாக தெரிவித்துள்ளார். அவர் விரைவில் நல்ல முடிவை எடுப்பார். இந்த பொங்கலுக்குப் பிறகு அரசியலில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை மக்கள் காணலாம்” என்றார்.

மேலும், “பொங்கலுக்குப் பிறகு அ.தி.மு.க.-வில் இருந்து பலரும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார்கள். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) எங்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது” என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் குறித்து பேசிய அவர், “வரும் 27 மற்றும் 28 தேதிகளில் மலேசியாவில் நடைபெறும் தனது திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சிகளில் விஜய் கலந்து கொள்ள உள்ளார். அதன் பின்னர், அவர் எந்தெந்த மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார் என்பது அறிவிக்கப்படும்” என்றார்.

விஜய்க்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்ட அவர், “அதையெல்லாம் தாண்டி, மக்களின் மனதில் விஜய் உறுதியாக இடம் பிடித்துள்ளார். 2026-ஆம் ஆண்டு அவர் ஆட்சி பீடத்தில் அமர்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது” என்று கூறினார்.

மேலும், “கூட்டம் கூட்ட பலர் அதிக செலவு செய்கிறார்கள். ஆனால் எந்தச் செலவும் இன்றி விஜய்க்கு கூட்டம் கூடுகிறது. எதிர்கால தமிழகத்தை விஜய் ஆள வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்” என செங்கோட்டையன் தெரிவித்தார்.