பிரபல இந்திய பயண யூடியூபரான அனந்த் மிட்டல், சீனா சென்றபோது குவாங்சோ விமான நிலையத்தில் சீன அதிகாரிகளால் சுமார் 15 மணிநேரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சீனாவில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதை எதிர்த்து அவர் முன்பு வெளியிட்ட வீடியோவே இந்த நடவடிக்கைக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
மேலும் விசாரணையின் போது அவரது கேமராக்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, சுமார் 29 மணிநேரம் அவர் உணவின்றி தவித்ததாகவும், சீனாவுக்கு எதிரான அவரது பழைய வீடியோக்களும் இந்த கெடுபிடிகளுக்குக் காரணமாக இருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது பாதுகாப்பாக இந்தியா திரும்பியுள்ள அனந்த் மிட்டல், இந்தச் சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் கண்ணீர் மல்கப் பேசியுள்ளார்.
இது தான் ஒரு சாதாரண யூடியூபர் என்றும், சர்ச்சைக்குரிய அல்லது அரசியல் ரீதியான விவகாரங்களில் தலையிட்டது தனது தவறு என்றும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். இனிவரும் காலங்களில் இதுபோன்ற சர்ச்சைகளில் ஈடுபட மாட்டேன் என்று உருக்கமாகத் தெரிவித்துள்ள அவர், சீன அதிகாரிகளின் கடுமையான விசாரணைக் குறித்து தனது அச்சத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் சீனாவில் பிச்சைக்காரர்கள் டிஜிட்டல் முறையில் பணம் பெறுவது குறித்து அவர் பதிவிட்ட முந்தைய வீடியோவும் அந்த நாட்டின் பிம்பத்தைச் சிதைப்பதாகக் கருதப்பட்டு, இந்த விசாரணைக்கு ஒரு தூண்டுகோலாக அமைந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
