மதுரை திருப்பரங்குன்றம் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகை கஸ்தூரி, அங்கு கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக நிலவும் சர்ச்சைகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை அவர் கடுமையாக விமர்சித்தார்.
“திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் மௌனம் காப்பது ஏன்? அவருக்குப் பேச விருப்பம் இல்லையா அல்லது பேசத் தெரியவில்லையா? இரண்டுமே ஒரு தலைவருக்கு மோசமானது” என்று அவர் கேள்வி எழுப்பினார். மேலும், கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கும் விஜய், கார்த்திகை தீபத்திற்கு வாழ்த்து சொல்லாதது ஏன் என்றும், மக்கள் ஒரு பிரச்சனைக்காக உயிரை மாய்த்துக்கொள்ளும் போது மனிதாபிமான அடிப்படையில் கூட அவர் அறிக்கை விடாதது வருத்தமளிப்பதாகக் கூறினார்.
திமுக அரசு மற்றும் திருமாவளவன் ஆகியோரையும் சாடிய கஸ்தூரி, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கூட இந்த விவகாரத்தில் குரல் கொடுக்கும்போது, தமிழக முதல்வர் கனவில் இருக்கும் விஜய் அமைதியாக இருப்பது தவறு என்று குறிப்பிட்டார்.
“மக்களைச் சந்திக்கும் கூட்டத்தில் முருகனை நம்பும் பக்தர்களும் இருக்கிறார்கள் என்பதை விஜய் உணர வேண்டும்; மதங்களை மதிக்கத் தெரிந்தால் மட்டுமே அவர் காமராஜர், வேலுநாச்சியார் போன்றவர்களின் பெயரைச் சொல்லி அரசியல் செய்ய தகுதியானவர்” என்றும் அவர் தெரிவித்தார். இந்துக்களுக்கு ஒரு நீதி, மற்றவர்களுக்கு ஒரு நீதி எனத் திருப்பரங்குன்றத்தில் அநீதி நடப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
