தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பாரதிய ஜனதா கூட்டணியில் இணைய வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விருப்பம் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் பியூஷ் கோயலைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமைச்சருடனான சந்திப்பில் விஜய் உள்ளிட்ட பல தலைவர்கள் குறித்துப் பேசியதாகவும், ஆனால் கூட்டணி குறித்து எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் கூறினார்.
திமுக அரசுக்கு எதிராக அனைவரும் இணைந்து நின்றால் வெற்றி பெறுவது எளிதாக இருக்கும் என்றும், இந்த அழைப்பு விஜய்க்கும் பொருந்தும் என்றும் அவர் குறிப்பிட்டார். வரும் தேர்தலில் தான் சென்னையில் போட்டியிடுவதா அல்லது தென் மாவட்டங்களில் போட்டியிடுவதா என்பதைத் தெய்வமும் கட்சியின் தலைமையும்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.
