பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த இளையோர் பிரிவுத் தலைவர் காம்ரான் சயீத் உஸ்மானி, இந்தியாவுக்கு எதிராக கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். வங்கதேசத்தின் தன்னாட்சியில் இந்தியா தலையிட முயன்றாலோ அல்லது தனது ‘அகண்ட பாரத’ கொள்கையை அந்நாட்டின் மீது திணிக்க முயன்றாலோ பாகிஸ்தானின் ஏவுகணைகள் சும்மா இருக்காது என அவர் மிரட்டியுள்ளார்.

மேலும், இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரால் வங்கதேசம் அச்சுறுத்தப்படுவதாகவும், அந்நாட்டை ஒரு இந்து நாடாக மாற்ற இந்தியா முயற்சிப்பதாகவும் அவர் சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக ஒரு வலுவான மூலோபாயத் திட்டத்தை முன்மொழிந்துள்ள உஸ்மானி, பாகிஸ்தானும் வங்கதேசமும் இணைந்து அதிகாரப்பூர்வ ராணுவக் கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். இந்தியாவுக்கு மேற்கில் பாகிஸ்தானும், கிழக்கில் வங்கதேசமும் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தினால் இந்தியாவின் நிலைமை மோசமாகும் என்றும், அதே நேரத்தில் சீனா அருணாச்சல பிரதேசம் மற்றும் லடாக் எல்லைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இரு நாடுகளும் தங்கள் ராணுவ முகாம்களை பரஸ்பரம் மற்றவர் நாடுகளில் அமைத்துக் கொள்வது பாதுகாப்பை பலப்படுத்தும் என்றும் அவர் அந்த வீடியோ அறிக்கையில் தெரிவித்துள்ளார்.