தமிழ்நாட்டில் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் (SIR) நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் 19-ம் தேதி ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தத் திருத்த நடவடிக்கையின்போது, உயிரிழந்தவர்கள், முகவரி மாறியவர்கள் மற்றும் இரட்டைப் பதிவு கொண்டவர்கள் என சுமார் 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டன. இதனால், தமிழகத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 6.41 கோடியிலிருந்து 5.43 கோடியாகக் குறைந்துள்ளது.

​வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்ட தகுதியுள்ள நபர்கள் மீண்டும் தங்கள் பெயரைச் சேர்க்க தேர்தல் ஆணையம் அவகாசம் வழங்கியுள்ளது. இந்நிலையில், வரைவு பட்டியல் வெளியான பிறகு, பெயர் சேர்க்கக் கோரி இதுவரை 1,53,571 பேர் விண்ணப்பித்துள்ளதாக மாநிலத் தேர்தல் ஆணையம் இன்று (டிச.23) அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. வரும் ஜனவரி 18-ம் தேதி வரை இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விடுபட்டவர்கள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடமோ விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.