தில்லியின் பட்பர்கஞ்ச் பகுதியில் உள்ள பொதுப் பூங்காவில், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கால்பந்து பயிற்சியாளர் ஒருவரை ஹிந்தி பேசத் தெரியவில்லை என்பதற்காக பாஜக கவுன்சிலர் ரேணு சவுத்ரி பகிரங்கமாக மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அப்பகுதி குழந்தைகளுக்குக் கால்பந்து பயிற்சி அளித்து வரும் அந்த வெளிநாட்டவரிடம், “நீ ஏன் இன்னும் ஹிந்தி கற்கவில்லை? ஒரு மாதத்திற்குள் ஹிந்தி கற்காவிட்டால் இந்தப் பூங்காவையே உன்னிடமிருந்து பிடுங்கி விடுவேன்” என்று ரேணு சவுத்ரி ஆவேசமாக எச்சரித்துள்ளார்.
ये बीजेपी की नेता है दिल्ली से, नाम है रेनू चौधरी, जिस अफ्रीकन व्यक्ति पर चिल्ला रही है वो पार्क में फुटबॉल सिखाता है, अगर कुछ गैरकानूनी किया हो तो कानून है अपने देश में, लेकिन इसको इसी तरह बदतमीजी भरी रील बाजी का अलग तरह का शौक है… 🤦♂️🤦♂️🥴
एक सवाल:अफ्रीका में रह रहे भारतीयों… pic.twitter.com/julrAHqvCT
— 🇮🇳Rohit🇮🇳 (@Rohit_p__) December 21, 2025
மேலும், அந்தப் பயிற்சியாளர் குற்றச் செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளதாகக் குற்றம் சாட்டிய அவர், அங்குள்ள மற்றவர்களையும் அவரை எச்சரிக்கையாகக் கவனிக்குமாறு மிரட்டல் விடுத்துள்ளார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, கவுன்சிலரின் இந்தச் செயல் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அநாகரீகமான நடத்தை என்று நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
வெளிநாட்டில் பணியாற்றும் இந்தியர்களை அங்கிருப்பவர்கள் இதேபோல நடத்தினால் எப்படி இருக்கும் எனப் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். இது குறித்து விளக்கமளித்துள்ள ரேணு சவுத்ரி, அப்பகுதியில் நிலவும் தகவல் தொடர்பு சிக்கல்களைச் சரிசெய்யவே தான் அப்படிப் பேசியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
2022-ஆம் ஆண்டு மாநகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற இவர், தற்போது தில்லி பாஜக மகளிர் அணியில் முக்கியப் பொறுப்பில் உள்ளார். மொழித் திணிப்பு மற்றும் வெளிநாட்டவர் மீதான இத்தகைய அணுகுமுறை தேசிய அளவில் தற்போதைய பேசுபொருளாக மாறியுள்ளது.
