திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள ஆர்கே பேட்டை தாலுக்கா ஐயனேரி கிராமத்தில் பெண்களை கேலி செய்ததாக கூறப்படும் இரண்டு இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர். இச்சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஐயனேரி கிராமத்தைச் சேர்ந்த குமரேசன், சதீஷ் ஆகிய இருவரும், அந்தக் கிராமத்தில் வசிக்கும் திருமணமான பெண்கள் மற்றும் சிறுமிகள் உள்ளிட்ட பெண்களை தொடர்ந்து கேலி கிண்டல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்த கிராம மக்கள், இருவரையும் பலமுறை எச்சரித்து அனுப்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், சம்பவ நாளில் இருவரும் மது போதையில் மீண்டும் கிராமத்துக்குள் வந்து, இரவு நேரம் என்றே பாராமல் பெண்களை கேலி செய்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, கிராம மக்களுக்கும் அந்த இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதத்துக்குப் பிறகு அங்கிருந்து சென்ற இளைஞர்கள், தங்களுடன் நண்பர்களை சேர்த்து சுமார் 10 பேர் கொண்ட கும்பலாக மீண்டும் கிராமத்துக்குள் வந்தனர். கத்தியை காட்டி மிரட்டியதாகவும், ‘நானும் ரவுடிதான்’ என கூறி பொதுமக்களுடன் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், அந்த கும்பலை சுற்றிவளைத்தனர். இதனை கண்ட இளைஞர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். அவர்களில் இருவரை கிராம மக்கள் மடக்கிப்பிடித்து, மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, குமரேசன் மற்றும் சதீஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.