திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே உள்ள இருளஞ்சேரி கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாக அண்ணியை அவரது கொழுந்தனே கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருளஞ்சேரி கலைஞர் நகரைச் சேர்ந்த இளையராஜா என்பவரது மனைவி சாந்தி. இவர்களுக்குத் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகும் நிலையில், 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இதனிடையே, இளையராஜாவின் தம்பி இசைமேகத்திற்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், அவரது மனைவி தற்போது கர்ப்பமாக உள்ளார். இது குறித்து சாந்தி அடிக்கடி சாடைப் பேச்சுகள் பேசி கிண்டல் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மீண்டும் சாந்தி தனது தம்பி மனைவியின் கர்ப்பம் குறித்து ஏளனமாகப் பேசியதால் ஆத்திரமடைந்த இசைமேகம், தனது அண்ணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
தகராறு முற்றவே, வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்துச் சாந்தியின் உடல் முழுவதும் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடிய சாந்தியை உறவினர்கள் மீட்டுத் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சாந்தி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள இசைமேகத்தைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
