கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள புன்னசெரி பகுதியைச் சேர்ந்த அனு (38) என்ற பெண், தனது 5 வயது மகன் ஹர்ஷனை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அனு, கடந்த சில மாதங்களாக மனநல பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று காலை தனது மகனைக் கொன்ற பிறகு, அவரே போலீசாருக்கு போன் செய்து தகவலைத் தெரிவித்துள்ளார்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், மயங்கிக் கிடந்த சிறுவனை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதையடுத்து போலீசார் அனுவை கைது செய்து, இந்தத் துயரமான சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிச் செல்லும் சிறுவன் தாயாலேயே கொல்லப்பட்ட இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
