தமிழக சட்டசபையின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ள நிலையில், அடுத்த சட்டசபைக்கான தேர்தலை 2026-ஆம் ஆண்டு மே மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் தேர்தல் தொடர்பான ஆரம்பகட்ட பணிகளை தொடங்கி வைத்துள்ளது.

இதற்கிடையே, அரசியல் கட்சிகள் அனைத்தும் முழுவீச்சில் தேர்தல் தயாரிப்புகளை தொடங்கி வருகின்றன. தற்போதைய அரசியல் சூழ்நிலையில், தி.மு.க., அ.தி.மு.க., தவெக ஆகிய கட்சிகளின் தலைமையிலும், நாம் தமிழர் கட்சி தனித்தும் போட்டியிடுவதால், நான்கு முனைப் போட்டி உருவாகும் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த நிலையில், தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் வகையில், தவெக தலைவர் விஜய் தலைமையில் சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், கட்சியின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், தேர்தல் பிரிவு மேலாண்மை செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஆனால், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அவர், பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து தினசரி கட்சி பணிகளை கவனித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கூட்டணி பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க தனியான குழு அமைப்பது குறித்தும், அந்தக் குழுவில் இடம்பெற வேண்டிய நிர்வாகிகள் யார் யார் என்பது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. அதேபோல், வரும் சட்டசபைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழு அமைப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவின் உறுப்பினர்கள் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், மக்களின் அடிப்படை தேவைகள், மாநிலத்தின் முக்கிய பிரச்சினைகள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்புகளையும் உள்ளடக்கிய வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்க வேண்டும் என்பதில் விஜய் தனிப்பட்ட கவனம் செலுத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.