சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த இளங்கோ – பவானி தம்பதியின் 5 வயது மகள் தேஜாஸ்ரீ, அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் யூகேஜி படித்து வந்தார். சனிக்கிழமை காலை வழக்கம் போல பள்ளிக்குச் சென்ற சிறுமி, வகுப்பறையில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகத்தினர், உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மானாமதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மருத்துவமனையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, சிறுமி தேஜாஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மானாமதுரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமியின் உடல் உடற்கூறாய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பள்ளிக்குச் சென்ற குழந்தை திடீரென உயிரிழந்த சம்பவம், அவரது பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.