இந்தியாவைத் தொடர்ந்து தற்போது ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானுக்குச் செல்லும் நதி நீரைத் தடுக்க அதிரடி முடிவை எடுத்துள்ளது. சிந்து நதி நீரைப் பயன்படுத்துவதில் இந்தியா காட்டிய அதே வேகத்தில், தாலிபான் அரசு தனது குனார் நதி (Kunar River) நீரைத் தனது சொந்தத் தேவைகளுக்காகத் திருப்ப ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்காக நங்கர்ஹார் மாகாணத்தில் உள்ள தாருண்டா அணைக்கு நீரைத் திருப்பும் திட்டத்திற்குத் தாலிபான் பிரதமர் அலுவலகத்தின் பொருளாதாரக் குழு பச்சைக்கொடி காட்டியுள்ளது. ஏற்கனவே இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தியுள்ள நிலையில், இது பாகிஸ்தானுக்குப் பெரும் பொருளாதார மற்றும் தண்ணீர் நெருக்கடியை ஏற்படுத்தும்.
சுமார் 500 கி.மீ ஓடும் குனார் நதி, பாகிஸ்தானின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு மிக முக்கியமான ஆதாரமாகும். ஆப்கானிஸ்தானின் இந்த புதிய அணைத் திட்டத்தால் பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணம் கடுமையான வறட்சியைச் சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்தியா-பாகிஸ்தான் இடையே உள்ளது போல ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையே எந்தவொரு நதி நீர் பகிர்வு ஒப்பந்தமும் இல்லை. இதனால், தாலிபான் அரசின் இந்தச் செயல்பாட்டைத் தடுக்க பாகிஸ்தானிடம் எந்தவொரு சட்டப்பூர்வ ஆதாரமும் இல்லை என்பது அந்நாட்டுக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
