ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே கடும் பதற்றம் நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டதுடன், பதிலுக்குப் பாகிஸ்தானும் இந்திய விமானங்களுக்குத் தடை விதித்தது.

இந்நிலையில், வரும் டிசம்பர் 24-ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த இந்த வான்வெளித் தடையை, 2026-ஆம் ஆண்டு ஜனவரி 23-ஆம் தேதி வரை நீட்டிப்பதாகப் பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் (PAA) தற்போது அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள புதிய ‘நோட்டாம்’ (NOTAM) அறிக்கையின்படி, இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட வணிக ரீதியிலான விமானங்கள் மற்றும் ராணுவ விமானங்கள் என அனைத்தும் பாகிஸ்தான் வான்பரப்பைப் பயன்படுத்தத் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடை நீட்டிப்பால், மேற்கத்திய நாடுகளுக்குச் செல்லும் இந்திய விமானங்களின் பயண நேரம் மற்றும் எரிபொருள் செலவு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.