இணையத்தில் கேலிக்குள்ளான ஒரு சாதாரண புகைப்படம், இன்று ஒரு இளைஞரின் வாழ்க்கையையே மாற்றியுள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் வினீத் செந்தில்ராஜ் (Vineeth Sendilraj), எலான் மஸ்க்கின் செயற்கை நுண்ணறிவு நிறுவனமான xAI-இல் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார்.

சில வாரங்களுக்கு முன்பு நடந்த xAI ஹேக்கத்தான் (Hackathon) போட்டியின் போது, வினீத் தண்ணீர் குடித்த விதம் சமூக வலைதளங்களில் பெரிய அளவில் கிண்டல் செய்யப்பட்டது.

குறிப்பாக, இந்தியர்கள் மற்றும் தெற்காசியப் பொறியாளர்களைக் குறிவைத்து ‘நாற்றம்’ (Smell) தொடர்பான இனவெறி கருத்துக்களும் பரப்பப்பட்டன. இந்த விவகாரம் ஒரு கட்டத்தில் ஒரு நிறுவனத்தின் உயர் அதிகாரியின் வேலையையே பறிக்கும் அளவுக்குப் பெரிய சர்ச்சையானது.

தன்னை நோக்கி வீசப்பட்ட கிண்டல்களை வினீத் மிகவும் முதிர்ச்சியுடன் கையாண்டார். “10 லட்சம் பேர் நான் தண்ணீர் குடிப்பதை விமர்சித்தீர்கள், ஆனால் எனக்கு அப்போது தாகமாக இருந்தது” என நகைச்சுவையுடன் பதிலளித்தார்.

வெறும் 10 நாட்களில், அவர் பங்கேற்ற அதே ஹேக்கத்தானில் முதலிடம் பிடித்ததுடன், தற்போது அதே நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பையும் பெற்றுள்ளார்.

“ஒரு வாரத்திற்கு முன்பு தண்ணீர் குடித்ததற்காகக் கிண்டல் செய்யப்பட்டேன், இப்போது AI-இன் எதிர்காலத்தை உருவாக்க xAI-இல் இணைகிறேன்” என அவர் பதிவிட்டுள்ளார்.

ஜார்ஜியா டெக் பல்கலைக்கழக மாணவரான வினீத், அமெரிக்காவின் உயரிய ‘பிரசிடென்ஷியல் ஸ்காலர்’ விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.