சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள், திட்டமிட்டு பிச்சையெடுக்கும் செயல்களில் ஈடுபடும் பாகிஸ்தானியர்கள் மீது கடுமையான விசா கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. குறிப்பாக, உம்ரா விசா மூலம் புனித நகரங்களான மெக்கா மற்றும் மதினாவிற்குச் செல்லும் பலர், அங்கு பிச்சையெடுப்பதையே தொழிலாகக் கொண்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, சவுதி அரேபியா இதுவரை சுமார் 56,000 பாகிஸ்தானியர்களை அந்நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது. வளைகுடா நாடுகளில் பிச்சையெடுத்ததற்காகக் கைது செய்யப்படுபவர்களில் 90 சதவீதம் பேர் பாகிஸ்தானியர்கள் என்ற அதிர்ச்சித் தகவலை அந்நாட்டின் வெளியுறவுத் துறை செயலாளரே உறுதிப்படுத்தியுள்ளார்.
பாகிஸ்தானில் பிச்சையெடுப்பது என்பது வறுமையால் செய்யும் செயல் என்பதைத் தாண்டி, தற்போது அது ஒரு லாபகரமான மற்றும் நன்கு கட்டமைக்கப்பட்ட தொழிலாக சர்வதேச அளவில் உருவெடுத்துள்ளது. 2025-ம் ஆண்டில் மட்டும் பிச்சையெடுக்கும் கும்பல்களுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் 66,000-க்கும் மேற்பட்ட பயணிகளை பாகிஸ்தான் விமான நிலையங்களிலேயே தடுத்து நிறுத்தியுள்ளது.
வளைகுடா நாடுகள் மட்டுமின்றி அஜர்பைஜான், துபாய் போன்ற இடங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் சர்வதேச அரங்கில் பாகிஸ்தானுக்குப் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.
