ரன்வீர் சிங் நடித்துள்ள துரந்தர் திரைப்படம், பாகிஸ்தான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பல வளைகுடா நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, நடிகர் அக்‌ஷய் கண்ணா நடித்துள்ள ‘FA9LA’ பாடல் அங்கு கவனம் பெற்றுள்ளது.

ஒருபுறம், இப்படம் “பாகிஸ்தான் எதிர்ப்பு” கருத்துகளை கொண்டுள்ளதாக குற்றம்சாட்டி, பாகிஸ்தானில் சில அரசியல்வாதிகள் படத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளனர். மறுபுறம், பாகிஸ்தானில் நடைபெற்ற ஒரு விருந்தில் துரந்தர் படத்தின் பாடல் இசைக்கப்பட்டதை காட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், முன்னாள் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ கலந்து கொண்டிருந்ததாகவும், பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) தலைவர் மேடையில் இருந்து மக்களை வரவேற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதில் பயன்படுத்தப்பட்ட ‘FA9LA’ பாடல், பஹ்ரைன் நாட்டைச் சேர்ந்த ராப்பர் ஃபிளிப்பராச்சியால் உருவாக்கப்பட்டதாகவும், அது கடந்த மே 30-ம் தேதி வெளியிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

 

இதனிடையே, முரண்பாடாக, பிலாவல் பூட்டோவின் சொந்த கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி, தனது நிறுவனர் மற்றும் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் படங்கள் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதை எதிர்த்து, கராச்சி நீதிமன்றத்தில் சட்டப்பூர்வ சவாலை தாக்கல் செய்துள்ளது. மேலும், படத்தின் நடிகர்கள் மற்றும் தயாரிப்பு குழுவினருக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஆதித்யா தார் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் ரன்வீர் சிங்குடன் ஆர். மாதவன், அர்ஜுன் ராம்பால், சாரா அர்ஜுன், சஞ்சய் தத், ராகேஷ் பேடி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், துரந்தர் திரைப்படம் வெளியான 13 நாட்களுக்குள் இந்தியாவில் மட்டும் ரூ.435 கோடிக்கும் அதிகமாக வசூலித்து, வசூல் சாதனை படைத்துள்ளதாக தயாரிப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.